சிலேடை
சிலேடை
சிலேடை (Double meaning, tripple meaning sometimes quadrable meaning..!)
ஆம்.. தமிழில் சிலேடை என்பது இரு பொருள் மட்டும் அல்ல. பல பொருட்களை சுட்டுவதற்கும்
இந்தப் பெயர் உண்டு.
இதனை பாடல்களாலும் எடுத்து ஆண்ட புலவர்கள் உண்டு. அவர்களுள் சிறந்தவர் கவி காளமேகம்.
இவருடைய குறிப்பு விக்கி பெடியாவில் இருந்து :
காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.
ஆசுகவி எனப்படுவோர் எடுத்த மாத்திரத்திலே கவி பாடக்கூடிய திறமை படைத்த புலவர்களைக் குறிக்கும்.
திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.
திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.
அவர் பாடிய பாடல்களுல் சிலவற்றை இந்த வாரத்திலிருந்து
பார்ப்போம்.
முதலில் பாடலை அப்படியே பார்ப்போம்.
சங்கரர்கு மாறுதலை; சண்முகற்கு மாறுதலை;
ஐங்கரர்கு மாறுதலை ஆனதே; - சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை; பித்தாநின் பாதம்
படித்தோர்க்கு மாறுதலைப் பார்.
இங்கு மாறுதலை என்பது முறையே சிவன், முருகன், வினாயகர், பெருமாள் மற்றும் சிவனடியார்
ஆகியோர்க்கு உகந்து வந்துள்ளமையைக் காண்க.
பொருள்:
சங்கரர்கும் ஆறுதலை – சிவனுக்கு கங்கையாகிய ஆறு தலையிலுண்டு
சண்முகற்கும் ஆறுதலை – முருகப் பெருமானுக்கும் ஆறு முகமுண்டு.
ஐங்கரர்கு மாறுதலை – ஐந்து கைகளையுடைய வினாயகனுக்கு மாற்றப்பட்ட தலை.
சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை – விஷ்ணுவுக்கு வெவ்வேறு அவதாரங்களில் மாறுபட்ட
தலைகள்.
பித்தாநின் பாதம் – பித்தனாகிக சிவனே! நின் பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலைப்பார் – பணிந்தோர்க்கும் ஆறுதல் கிடைக்கப் பெறுவதைப்
பார்க்க.
ஆகவே இவன் double meaning-ல பேசறான் என்று யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம்.
அப்போவே பேசிட்டோம்ல..!
கருத்துக்களைப் பின்னூட்டங்களில் இடவும்.
0 Comments:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்